Friday, July 24, 2009

இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் தேவையா?

சில நேரங்களில் நாம் காலம் காலமாக பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள் எல்லாம் தேவையா என்று தோன்றுகின்றது. அதிலும் சிறு வயதில் இருந்து எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் துக்கம் விசாரிப்பது.

ஒரு வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்து விட்டால் அதிக பட்சம் ஒரு மாதம் விசாரிக்கலாம், அதுவும், அவர்கள் உங்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்ப நண்பர்கள் என்றால். இல்லையென்றால் 16ம் நாள் காரியம் நடப்பதற்க்குள் சென்று விசாரித்து விட வேண்டும்.

அந்த வீட்டில் இருப்பவர்கள் ஒரு சகஜ நிலைக்குத் திரும்புவதற்க்கு காலம் கடந்து நாம் விசாரிப்பது தடையாகத்தான் இருக்கும். துக்கம் நடந்து ஆறு மாதம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ, விசாரிக்க வந்தேன் என்ற பெயரில், மீண்டும் அந்த வீட்டில் ஒரு இருக்கத்தையும், மயான அமைதியையும் ஏற்படுத்தி விடுவார்கள்.

பெரியவர்கள் சொல்லியிருக்கிறர்கள், "கல்யாணத்துக்குப் போகலைன்னாலும் கருமாதிக்குப் போகாம இருக்கக் கூடாதுன்னு", அதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் ஒருவரின் மறைவில் அந்தக் குடும்பம் கஷ்டப்படும் போது, "நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதே" என்று மறைமுகமாக தைரியம் சொல்வதுதான்.

குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோருக்கும், சிறு வயதில் கணவனை பறிகொடுத்த இளம் மனைவிக்கும், இனி குடும்பத்தை பார்த்துக் கொள்ளுவான் என்று நம்பியிருந்த மகனை கல்லூரி கடைசி ஆண்டில் பறிகொடுத்த வயதான பெற்றோருக்கும் காலம் கடந்து நாம் விசாரிப்பது துக்கத்தை அதிகப்படுத்துமே தவிர ஒரு போதும் குறைக்காது.

இதில் கடமைக்கு வந்து விசாரிப்பவர்களைக் கண்டால் பளீரென்று அறைய வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. என் உறவினர் ஒரு அக்காவிற்க்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து சில நாட்களில் இறந்து விட்டது. இது நடந்து சில வருடங்கள் கழித்து ஒரு திருமண வீட்டில் வைத்து நம்மூர் அறிவுஜீவிகள் துக்கம் விசாரிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கும் மன வருத்தம், திருமண வீட்டாருக்கும் தர்ம சங்கடம். துக்கம் நடந்த பிறகு இப்போதுதான் பார்க்கிறார்களாம், அதனால் விசாரிக்கிறார்களாம், இடம் பொருள் பார்க்காமல் கடமையாற்றும் கண்மணிகள்.

இதில் இன்னொரு பிரிவும் உண்டு, என் வீட்டில் துக்கம் நடந்ததை இவன் கேட்கவே இல்லை என்று கோபித்துக்கொள்ளும் கூட்டம். இவர்கள் போன்றவர்களுக்குப் பயந்தே எல்லோரும் 10 வருடங்கள் கழித்து பார்த்தாலும் துக்கம் விசாரிப்பார்கள். என்னைக் கேட்டால் இவர்களை பொருட்படுத்தாமல் விடுவது நல்லது. ஏனென்றால், உண்மையில் சோகத்தில் இருப்பவர்கள், யாரெல்லாம் வந்தார்கள், யாரெல்லாம் விசாரித்தார்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கணக்கு வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் விசாரித்து நாமும் கடமை தவறா கண்மணிகளாக வேண்டிய அவசியம் இல்லை.

போன தலைமுறையின் பழக்கங்களை காலத்திற்க்குத் தகுந்தாற்போல் நாம்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். சோகங்களை நம்மால் முடிந்தவரை பங்குபோட்டுக்கொள்ளலாம், முடியவில்லை என்றால் முடிந்தவரை அதை அதிகப்படுத்தாமல் இருப்போம்.

3 comments:

சரவணகுமரன் said...

சரியா சொல்லியிருக்கீங்க...

சிநேகிதன் அக்பர் said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

கல்கி said...

@ அக்பர்
@ சரவணகுமரன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... :-)

Post a Comment