Thursday, November 12, 2009

சென்னைவாசியா நீங்கள்?

சென்னைவாசியா நீங்கள்? வாரவிடுமுறையை உபயோகமாக கழிக்க விரும்புகிறீர்களா? இந்த லிங்க்கை பாருங்கள்.


நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் & தொலைபேசி எண்: shankar @ +91 98400 85673
இது நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், மனநிறைவு தரும் உதவியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Friday, July 24, 2009

இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் தேவையா?

சில நேரங்களில் நாம் காலம் காலமாக பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள் எல்லாம் தேவையா என்று தோன்றுகின்றது. அதிலும் சிறு வயதில் இருந்து எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் துக்கம் விசாரிப்பது.

ஒரு வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்து விட்டால் அதிக பட்சம் ஒரு மாதம் விசாரிக்கலாம், அதுவும், அவர்கள் உங்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்ப நண்பர்கள் என்றால். இல்லையென்றால் 16ம் நாள் காரியம் நடப்பதற்க்குள் சென்று விசாரித்து விட வேண்டும்.

அந்த வீட்டில் இருப்பவர்கள் ஒரு சகஜ நிலைக்குத் திரும்புவதற்க்கு காலம் கடந்து நாம் விசாரிப்பது தடையாகத்தான் இருக்கும். துக்கம் நடந்து ஆறு மாதம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ, விசாரிக்க வந்தேன் என்ற பெயரில், மீண்டும் அந்த வீட்டில் ஒரு இருக்கத்தையும், மயான அமைதியையும் ஏற்படுத்தி விடுவார்கள்.

பெரியவர்கள் சொல்லியிருக்கிறர்கள், "கல்யாணத்துக்குப் போகலைன்னாலும் கருமாதிக்குப் போகாம இருக்கக் கூடாதுன்னு", அதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் ஒருவரின் மறைவில் அந்தக் குடும்பம் கஷ்டப்படும் போது, "நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதே" என்று மறைமுகமாக தைரியம் சொல்வதுதான்.

குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோருக்கும், சிறு வயதில் கணவனை பறிகொடுத்த இளம் மனைவிக்கும், இனி குடும்பத்தை பார்த்துக் கொள்ளுவான் என்று நம்பியிருந்த மகனை கல்லூரி கடைசி ஆண்டில் பறிகொடுத்த வயதான பெற்றோருக்கும் காலம் கடந்து நாம் விசாரிப்பது துக்கத்தை அதிகப்படுத்துமே தவிர ஒரு போதும் குறைக்காது.

இதில் கடமைக்கு வந்து விசாரிப்பவர்களைக் கண்டால் பளீரென்று அறைய வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. என் உறவினர் ஒரு அக்காவிற்க்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து சில நாட்களில் இறந்து விட்டது. இது நடந்து சில வருடங்கள் கழித்து ஒரு திருமண வீட்டில் வைத்து நம்மூர் அறிவுஜீவிகள் துக்கம் விசாரிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கும் மன வருத்தம், திருமண வீட்டாருக்கும் தர்ம சங்கடம். துக்கம் நடந்த பிறகு இப்போதுதான் பார்க்கிறார்களாம், அதனால் விசாரிக்கிறார்களாம், இடம் பொருள் பார்க்காமல் கடமையாற்றும் கண்மணிகள்.

இதில் இன்னொரு பிரிவும் உண்டு, என் வீட்டில் துக்கம் நடந்ததை இவன் கேட்கவே இல்லை என்று கோபித்துக்கொள்ளும் கூட்டம். இவர்கள் போன்றவர்களுக்குப் பயந்தே எல்லோரும் 10 வருடங்கள் கழித்து பார்த்தாலும் துக்கம் விசாரிப்பார்கள். என்னைக் கேட்டால் இவர்களை பொருட்படுத்தாமல் விடுவது நல்லது. ஏனென்றால், உண்மையில் சோகத்தில் இருப்பவர்கள், யாரெல்லாம் வந்தார்கள், யாரெல்லாம் விசாரித்தார்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கணக்கு வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் விசாரித்து நாமும் கடமை தவறா கண்மணிகளாக வேண்டிய அவசியம் இல்லை.

போன தலைமுறையின் பழக்கங்களை காலத்திற்க்குத் தகுந்தாற்போல் நாம்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். சோகங்களை நம்மால் முடிந்தவரை பங்குபோட்டுக்கொள்ளலாம், முடியவில்லை என்றால் முடிந்தவரை அதை அதிகப்படுத்தாமல் இருப்போம்.

Saturday, June 27, 2009

ரகசியங்கள் !!!

பாத்துக்கோ பாத்துக்கோ நானும் தொடர் சங்கிலி இடுகை எழுதியிருக்கேன்.... (வ்டிவேலு பாணியில் படிப்பதும், சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்பட பாணியில் படிப்பதும் உங்களின் விருப்பத்திற்க்கு விடப்படுகிறது!!!)


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பிடிக்கும். கல்கி என்றால் தன்னைத்தானே செதுக்கும் சிற்பத்தின் பெயர் என்று என் தோழி சொன்னது. கல்லூரிக்காலம் முதலே இந்தப் பெயரில் ஈடுபாடு உண்டு. அதனால் நானே வைத்துக் கொண்டது.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அதெல்லாம் கணக்குல வைக்க முடியாதுங்க... ரொம்ப மனசைத் தொடுறா மாதிரி பாட்டு கேட்டாக்கூட அழுகை வரும். இப்போதான் டி.வில டெமி லொவேட்டோ கண்ணு கலங்குனதப் பாத்து நானும் அழுதுட்டு வரேன். :-)

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு பிடிக்கும். (மத்தவங்க படிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டம். 15 பேப்பர் இருக்குற அஸைன்மென்ட 5 பேப்பர்ல எழுதுறவங்க நாங்க. )

4. பிடித்த மதிய உணவு என்ன?

வீட்டில் என்றால், அப்பா வைக்கும் சாம்பாரும், அம்மா வைக்கும் அவியலும்.

சென்னையில் இருந்தவரை அஞ்சப்பரின் பிரியாணியும், சிக்கன் 65/பிங்கர் பிஷ்

இப்போ நான் சமைக்கும் எல்லாமே (நம்ம சமைச்சது நமக்கே புடிக்கலின்னா வேற யாருக்கு புடிக்கும்??)

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ம்ம்ம்ம்... வச்சிக்குவேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ரெண்டுமே...ஆனா அருவிக்குத்தான் முதல் இடம். கடலில் என்றால் அது எந்த அளவுக்கு குப்பை இல்லாமல் இருக்கிறது என்பதைப் பொறுத்து.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முதலில் அவர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை. அடுத்தது அவர்களின் உடல் மொழியை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது: யார் நல்லது சொன்னாலும் மனசுல வாங்கிட்டு அதுபடி நடக்க முயற்சி பண்ணுறது. முடிஞ்சவரைக்கும் கூட இருக்குறவங்களுக்கு உண்மையா இருக்குறது.

பிடிக்காதது: யார்கிட்டயாவது தோணுனதை சொல்லுறேன்னு போய் வாங்கிக் கட்டிக்கிறது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: பொறுமை

பிடிக்காதது: -------------- (அப்புறமா நிரப்பிக்கலாம், பொறந்த நாள் வருது, ஒரு பெரிய லிஸ்டே வச்சிருக்கேன், இப்ப எதையாவது சொல்லி அதைக் கெடுக்கணுமா? :-))

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

ம்ம்ம்ம்... வருத்தமெல்லாம் இல்லீங்க... சில நேரங்களில் பிரிவுகள்தான் உறவுகளை வலுவாக்கும்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வயலெட் நிற நைட்டி.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மானிட்டர் பாத்து டைப் பண்ணிட்டு இருக்கேன். (இப்போதைக்கு பாட்டு எதுவும் போடலை)

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்புத்தான்..

14. பிடித்த மணம்?

ரோஜாப்பூ மணம்


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நிறைய பதிவர்கள் பிடிக்கும். எல்லோருமே இந்த தொடர் விளையாட்டை பெரும்பாலும் முடித்து விட்டார்கள். இன்னும் அனுமதி கேட்கவில்லை, இருந்தாலும் அழைப்பது ஷண்முகப்பிரியன் சார் அவர்களை. எதிர்மறையான விமர்சனங்களையும் நல்ல விதத்தில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

(சார் உங்களிடம் கேட்காமலேயே தொடர் விளையாட்டுக்கு அழைத்ததற்க்கு மன்னிக்கவும்.)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அக்பர் அண்ணன். இப்போதான் எழுத ஆரம்பித்திருக்கிறார். இரண்டு வருடங்கள் வாசகனாக இருந்த அனுபவத்தினால் இன்னும் நல்ல படைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.


17. பிடித்த விளையாட்டு?

இறகுப்பந்து, கைப்பந்து, சதுரங்கம்.

18. கண்ணாடி அணிபவரா?

வெயிலுக்கு குளிர்க்கண்ணாடி அணியும் பழக்கம் உண்டு.

19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவை & உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் படம்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

இணையத்தில் அயன்,
தியேட்டரில், ஏஞ்சல்ஸ்&டீமோன்ஸ்

21. பிடித்த பருவ காலம் எது?

ம்ம்ம்ம். பள்ளிக்காலம் வரை மழைக்காலம்தான். (மழை வந்தால் எங்க ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க)
இப்போ எல்லாமே பிடிக்குது, எல்லா பருவ காலங்களும் ஒவ்வொரு விதத்துல அழகாத்தெரியுது.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புத்தகம் படிச்சு ரொம்ப நாளாச்சு . இப்போதைக்கு பதிவுலகம் மட்டும்தான்

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

இப்போது உபயோகிப்பது கணவரின் அலுவலக மடிக்கணினி, அதனால் படம் எதுவும் வைக்கவில்லை.
என்னுடைய மடிக்கணினி இருந்தபோது, என்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் எடுத்ததும் மாற்றிவிடுவேன்.


24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது:: இரைச்சலில்லாத எல்லா சத்தமும்.

பிடிக்காதது: காலையில் அடிக்கும் அலாரம் சத்தம்


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அமெரிக்கா வரை.


26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரையும் போல சாதாரண வழக்கமான செயல்கள்தான்.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கூடயே இருந்து குழி பறிக்கிறது
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம் , பிடிவாதம்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கேரளா (இன்னும் போனதில்லை)

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நல்லவர்கள் புடைசூழ, பிரச்சனையே இல்லாத வாழ்க்கை வாழணும்ன்னு ஆசை.

31.கணவன்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

வீட்டை சுத்தம் பண்ணுவது. (தலைவர் வீட்டுல இருந்தா சுத்தம் பண்ணுறது வேஸ்ட். 10 நிமிஷத்துல பழைய நிலைமைக்கு வந்துடும்)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்,
போர்க்களங்கள் மாறலாம் போர்கள் மாறுமா!!!

(இது சினிமா டயலாக்ன்னு தெரியாம சின்ன வயசுல சொல்லிட்டு திரிஞ்சிருக்கேன். ஆனா ரொம்ப பிடிச்ச வரிகள்.)

P.S: பதில்களை படித்துவிட்டு நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடான்னு புலம்புகிறவர்கள், ஒரு சின்ன டைவர்சன் எடுத்து அக்பர் அண்ணனின் வலைத்தளத்தில் போய் திட்டுங்கள். அவர்தான் என்னை எழுத சொன்னது. :-)

Friday, June 12, 2009

பொண்ணு/பையன் பாக்குறீங்களா? அப்போ இந்த பதிவையும் பாருங்கோ...!!!

மோகன் அண்ணானோட இந்த பதிவு படிச்சப்புறம் எழுதணும்னு தோணுன பதிவு இது...

பொண்ணு/பையன் பாக்கும் போது நிறைய விஷயங்கள் இருக்கு.

உதாரணத்துக்கு இந்த போன் மேட்டரையே எடுத்துக்குவோம். ரொம்ப வளவளன்னு பேசுறது வெகுளித்தனத்தின் வெளிப்பாடாக்கூட இருக்கலாம். இல்ல அவங்களுக்கு இருக்குற சந்தேகங்களை தீர்த்துக்க கூட இருக்கலாம். போன்ல ரொம்ப ஓவரா கேள்வி கேட்டா அந்த பொண்ணு திமிர் புடிச்ச பொண்ணுன்னோ இல்ல ரொம்ப அடக்கமா பேசுனா ரொம்ப நல்ல பொண்ணுன்னோ தப்பு கணக்கு போடாதீங்க.

கல்யாணத்துக்கு முன்னாடிதான் பையனுக்கு தம்/தண்ணி பழக்கமெல்லாம் இருக்கான்னு கேக்க முடியும். பழக்கம் இருந்தா ஆமான்னு சொல்லிட்டுப்போங்க இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க...(ஆனா உண்மைய சொல்லுறவங்க ரொம்ப கம்மி :-( ) அத விட்டுட்டு என்னப்பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டாளேன்னு டென்சனாகக் கூடாது. ஒருவேளை அந்த பையனுக்கு பழக்கம் இருந்து கல்யாணத்துக்கு அப்புறம் தெரியவந்து, அந்த பொண்ணு ஏதாவது கேட்டா என்ன சொல்லுவீங்க? "இதெல்லாம் நீ கல்யணத்துக்கு முன்னாடியே கேட்டிருக்கணும்"... நிறைய வீட்டுல தன் பையன் தம்/தண்ணி அடிக்கிறதே தெரியாது.!!!


அடுத்த விஷயம் வேலை/படிப்பு, இப்போ இருக்குற நிலமைல கண்டிப்பா கேட்டுத்தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம். முடிஞ்சா டிகிரி முடிச்சி வேலைக்கு சேர்ந்தப்புறம் எந்த அளவு படிக்கிறதுல/ தன்னை மேம்படுத்திக்கிறதுல கவனம் செலுத்தியிருக்கான்னு தெரிஞ்சிக்கணும்.உதாரணத்துக்கு சர்டிபிகேஷன் மாதிரி..

அப்புறம் எதிர்கால திட்டங்கள் பத்தி கூட கேக்கலாம். வெளிநாட்டில் வேலை பாக்குறவங்களா இருந்தா, தற்காலிகமா வெளிநாட்டுல இருக்குறீங்களா இல்ல நிரந்தரமா இருக்க போறீங்களான்னு இப்பவே பேசிக்கலாம்.


அதே மாதிரி பையனும் பொண்ணுகிட்ட சில விஷயங்களை கேட்டு தெளிவு படுத்திக்கணும். உதாரணத்துக்கு சொல்லணும்னா, வேலைக்கு போறது/ படிக்கிறது. சில பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்கு போயிருப்பாங்க, ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் போகவேண்டாம்ன்னு நெனைக்கலாம். பொண்ணு தேடும்போது வேலைக்கு போகலைன்னாலும் பரவாயில்லான்னு சொல்லிட்டு அப்புறம் அந்த பொண்ணு போகணும்ன்னு எதிர்பாக்ககூடாது. அதனால கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் தெளிவா பேசிடுறது நல்லது.


அடுத்த விஷயம் சமையல், நீங்க நல்லா வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு நெனைக்கிற ஆளா இருந்தா பொண்ணு சமையல் விஷயத்தில எப்படின்னு தெளிவா கேட்டுக்கோங்க. அந்த பொண்ணுதான்னு முடிவாயிடுச்சுன்னா உங்களுக்கு புடிச்ச சாப்பாட்டு அயிட்டங்களை உங்க அம்மாகிட்ட இருந்து கத்துக்க சொல்லிடுங்க.(என்னதான் அந்த பொண்ணு நல்லா சமைச்சாலும், எங்க அம்மா மாதிரி சமைக்கலன்னு சொல்லுறது ஒரு பேஷனாயிடுச்சு, ஆனா நம்ம அம்மா வயித்துல பொறந்த நம்ம அக்காவும், தங்கச்சியும் சமைக்கிறதே அம்மா சமைக்கிறது போல இல்லையே, வேற வீட்டுல இருந்து வந்த பொண்ணு எப்படி சமைப்பா அப்படின்னு யோசிக்கவே மாட்டாங்க.)

அதே மாதிரி பொண்ணுங்களும் கேக்கலாம், அந்த பையனுக்கு சமையல் ஆர்வம் எல்லாம் எப்படின்னு. எப்பவாவது நம்மளால செய்ய முடியாத நேரத்துல உபயோகமா இருக்கும்.


அடுத்த விஷயம் கடவுள் நம்பிக்கை, பையன் நாத்திகனா இருந்து பொண்ணு ஆத்திகமா இருந்தா பிரச்சனை கம்மி, அதே தலகீழா இருந்ததுன்னா, அந்த பொண்ணு பாவம். படுத்தி எடுத்துடுவாங்க. பையன் கொஞ்சம் முஞ்சிய சீரியஸா வச்சிகிட்டு எனக்கு நம்பிக்கை இல்ல, கட்டாயப்படுத்தாதன்னு சொல்லிட்டா அந்த விஷயத்த பொண்ணுங்க திரும்ப கட்டாயப்படுத்த முடியாது. அதே மாதிரி எல்லாம் பொண்ணுங்க சொல்ல முடியாது, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு இல்லன்னு சுலபமா சொல்லிடுவாங்க. அதனால கல்யாணத்துக்கு முன்னாடியே இதப்பத்தி பேசிடுறதும் நல்லது.


அடுத்தது கவனிக்க வேண்டிய விஷயம் குடும்பப்பிண்ணனி, குடும்பத்திலிருப்பவர்கள் பழகும் விதம், நம்ம குடும்பத்துக்கும் நமக்கும் ஒத்துவருமா எல்லாத்தையும் நாமளே அலசி ஆராய்ஞ்சி பாத்துறணும் (இந்த விஷயத்துல வீட்டுல இருக்குறவங்கள நம்பக்கூடாது, கல்யாணத்த பண்ணுறவரைக்கும் சம்பந்திங்களை தூக்கிவச்சிட்டு ஆடுவாங்க, பின்னால பிரச்சனை வரும்போது நாமதான் மண்டைய பிச்சிகிட்டு இருப்போம்.)


இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு, என்னைக்கேட்டா, வரதட்சணை விஷயங்களைக்கூட பொண்ணும் பையனும் பேசிக்கிட்டா தப்பு இல்ல.. இதெல்லாம் பெரியவங்க விஷயம்னு சொல்லுவாங்க, ஆனா பொண்ணுக்குத்தான் டார்ச்சர் கொடுப்பாங்க. (சகோதரிகளே உஷார், இப்போ வரதட்சணைக்கு புது பேர் வச்சிருக்காங்க, "மரியாதை செய்யிறது"ன்னு. நேரடியா இது வேணும் அது வேணும்னு கேக்கமாட்டாங்க, ஆனா அவங்க எதிர்பாத்தது வரலன்னா, மாப்பிள்ளைக்கு மறுவீட்டு மரியாதை, சம்பந்தி மரியாதைன்னு புதுசு புதுசா கண்டுபுடிச்சு கறந்துடுவாங்க.)

பி.கு: இது உண்மையில நடந்ததுங்க, பொண்ணை மட்டும் கொடுங்க வேற எதுவும் வேணாம்ன்னு சொல்லிட்டு, நாத்தனார் மரியாதைன்னு புதுசா ஒண்ணு கண்டுபுடிச்சி ஒரு லட்ச ரூபாய்க்கு நகை வாங்கியிருக்காங்க நாத்தனாருக்கு. இந்த கொடுமையெல்லாம் என்னன்னு சொல்ல.

இவங்க வரதட்சணை வாங்குற டெக்னிக் எல்லாம் இன்னொரு இடுகையிலதான் போடனும் அவ்ளோ இருக்கு. :-)

சரி, பொண்ணு/பையன் பாக்குற விஷயத்துல இவ்ளோதான் இப்போ நியாபகம் இருக்கு. உங்களுக்கு ஏதாவது நியாபகம் வந்தா பின்னூட்டத்துல போடுங்க.

Sunday, May 31, 2009

சில்லுன்னு ஒரு கோடைக்காலம்

ஒவ்வொரு கோடையும் ஒவ்வொரு புது அனுபவம்தாங்க.....

ஒரு சில கோடைகால அனுபவங்கள் மழைக்காலம் வர்றதுக்குள்ள மறந்துடுவோம், ஒரு சில அனுபவங்கள் பசுமரத்தாணி போல மனசுல எப்பவும் இருக்கும். சில நேரங்கள்ல புது அனுபவங்கள் பழைய நியாபகங்களை கொண்டுவரும்...

அதுக்கு என்ன இப்போன்னு கேக்குரீங்களா?

இந்த கோடை என் வாழ்க்கைல நடந்த ஒரு சம்பவத்தை மறுபடியும் நியாபகப்படுத்தி இருக்கு...

அது என்னுடைய முதல் ஊட்டி பயணம். அதுவும் மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, அண்ணண்கள், அக்காள்கள்ன்னு ஒரு 16 பேரு... அந்த கூட்டத்திலேயே நான் தான் கடைக்குட்டி... யாராவது என்ன படிக்கிற என்று கேட்டால் இந்த காலத்து குழந்தைகள் போல் "பஸ்ட் ஸ்டாண்டர்ட் டூ செகண்ட்" என்று சொல்லத்தெரியாமல், இப்போ லீவு, இன்னும் நான் படிக்கல என்று உளறிக்கொண்டிருந்த வயது.

நல்லபடியாக சுற்றுலா சென்று கொண்டிருந்த சமயம், திடீரென்று எங்கள் குழுவில் ஒரு சலசலப்பு... என்னைக் காணவில்லை!!!... அந்த கூட்டத்தில் எப்போது தொலைந்தேன் என்று யாருக்கும் தெரியவில்லை.. பெருசுகள் எல்லாம் சிறுசுகளிடம் கேட்க, எல்லோரும் ஒருவர் மாற்றி ஒருவரிடம் கைகாட்ட, எல்லோருக்கும் டென்சன் அதிகமாகிக் கொண்டே போனதாம். 2 மணி நேரத்துக்கும் மேல் நாங்கள் அதுவரை சென்ற கடை, இடங்கள் எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை....

இனி போலீசிடம் போவதுதான் சரி என்று பெருசுகள் எல்லாம் பக்கத்தில் ரோந்தில் இருந்த போலீசிடம் விஷயத்தை சொல்ல, அவர் கூட கொஞ்சம் டென்சனாக்கும் விதமாக, ஊருக்குள்ள இருந்தா கண்டுபுடிக்கலாம், ஒருவேளை மலைவாசிங்க கிட்டயோ இல்ல ரவுடிங்ககிட்டயோ மாட்டியிருந்தா கஷ்டம் தான் கண், கிட்னி எல்லாம் எடுத்துடுவாங்க என்று அவரால் முடிந்தவரை பயமுறுத்தி விட்டு பின்னர், ஸ்டேசனுக்கு வழி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அதுவரை அம்மா ஊரில் இருக்கும் எல்லா சாமிக்கும் விதவிதமாக என்னென்னவோ வேண்டிக்கொண்டு கண்ணில் தண்ணீரோடு நாங்கள் சென்ற வேனில் உட்கார்ந்திருக்க.. அப்பாவும், மாமாவும் ஸ்டேசனுக்கு போனார்கள்.

இதற்க்கிடையில் தொலைந்துபோன நான் கொஞ்ச நேரம் கழித்துதான் உணர்ந்திருப்பேன், கூட வந்தவர்கள் யாரும் பக்கத்தில் இல்லை என்று.. எனக்கு நியாபகம் இருக்கும்வரை ஒரு போலீஸ் நான் தனியாக சுற்றுவதைப் பார்த்து விசாரித்தார். என்னுடைய பெயர், அப்பா, அம்மா பெயர், எந்த ஊர் எல்லாம் தெளிவாக சொல்லிவிட்டு, அவரிடமே "எங்க அப்பா, அம்மாவ காணோம், தொலஞ்சு போய்ட்டாங்க" என்று சொன்னேன்.

அவர் கொஞ்சம் குழம்பி இருப்பாரோ என்னவோ, கொஞ்ச நேரம் கையில் இருந்த வாக்கி டாக்கியில் ஏதோ பேசிவிட்டு, ஜீப்பின் மேல் சப்பணக்கால் போட்டு உட்கார்ந்திருந்த என்னிடம் வந்தார். நாம ஸ்டேசன் போயி வெயிட் பண்ணுவோமா என்றர். நான் பக்கத்தில் விற்றுக்கொண்டிருந்த பஞ்சு மிட்டாயை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே சரி என்று தலையாட்டினேன். அப்புறம் அவரே ஒரு பஞ்சுமிட்டாய் குச்சியை வாங்கிக்கொடுத்தார்.

நான் சாப்பிட ஆரம்பித்த நேரம், போலீஸ் ஸ்டேசனுக்கு போய்க்கொண்டிருந்த அப்பாவும் மாமாவும், அந்த இடத்தினை கடந்தார்கள்.
ஒரு வழியாக அப்பாவைக் கண்டுபிடித்துவிட்டேன் :-)

அப்புறம் அப்பாவுக்கு கொஞ்சம் அட்வைஸும் எனக்கு இன்னொரு பஞ்சு மிட்டாயும் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அந்த நல்ல மனிதர்.

இது நடந்து பல வருடங்களாயிற்று இப்பொது, இந்த கோடையில் நான் தொலைந்தது சான் ஃபிரான்சிஸ்கோவில்... என் கணவரின் நண்பரின் குடும்பமும், நாங்களும் சென்றோம். வழக்கம்போல் கடைசி நேரத்தில் முடிவு செய்து போனதால், அங்கே போய் தான் நுழைவு சீட்டு வாங்க வேண்டியிருந்தது... வீட்டுக்காரரும் அவரின் நண்பரும் கார் பார்க்கிங் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் நானும் நண்பரின் மனைவியும் நுழைவு சீட்டு வாங்க கிளம்பிவிட்டோம்.

மொத்தம் ஒரு 7 இடத்தில் இந்த நுழைவுச்சீட்டு வாங்கலாம், அதில் ஒரு இடத்தில் போய் நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டு, கார் பார்க்கிங் தேடி சென்றவர்களுக்கு சொல்லலாம் என்று கைப்பையை கவுத்துப் போட்டு தேடினாலும் தோழியின் செல்பேசியை காணவில்லை. என்னிடமும் செல்பேசி கிடையாது.

சரி ஒரு பொது தொலைபேசியாவது கண்ணில் படுகிறதா என்று பார்த்தால் நம்ம நேரத்துக்கு ஒன்றுகூட கண்ணில் படவில்லை. நுழைவுச்சீட்டு வாங்கிய இடத்தில் ஒரு போன் செஞ்சுக்கலாமா என்று கேட்டோம், அவர் ஏதோ மேலதிகாரிக்கு எல்லாம் போன் போட்டுவிட்டு, சாரி என்று கையை விரித்துவிட்டார்.

மீண்டும் அறைக்கு சென்று செல்பேசியை எடுக்கலாம் என்றால், டாக்ஸி எப்படி அழைப்பது? அதற்க்கும் போன் செய்ய வேண்டுமே. ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட 2 தெருக்களையே சுற்றி வந்தோம். ஒரு வழியாக தோழி அவரின் கணவரை தூரத்தில் பார்த்துவிட்டார்.

சரி நம்ம ஆளு என்ன பண்ணுறாருன்னு பாத்தா, இந்தியால இருக்குற பிரண்டுக்கு போன் போட்டு மொக்கைய போட்டுட்டு இருந்தார். அதுவும் என்ன மேட்டருன்னா, அவர கிராஸ் பண்ணி போன பொண்ணு நயன் தாரா மாதிரி தெரிஞ்சுதாம், அது உண்மைலியே நயன் தாராவா, இல்ல நயன் தாரா சாயல்ல வேற யாரவதான்னு.

இப்போ நயன் தாரா இந்தியால இருக்காங்களா, இல்ல சான் ஃபிரன்சிஸ்கோ வந்திருக்காங்களான்னு யாராவது விசாரிச்சு சொன்னா அவரு கொஞ்சம் நிம்மதியா தூங்குவாரு. முடிஞ்சா உதவி பண்ணுங்க.. :-)

எப்படியோ, ரெண்டு தடவ தொலஞ்சாலும் நல்லா சில்லுன்னு இருக்குற மாதிரி அனுபவங்கள் கிடைச்சிருக்கு... :-)

Friday, April 10, 2009

எங்கள் வீட்டில் முதல் பிறந்த நாள்...!!!

ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி:

பக்கத்து ஊர்ல இருந்த ஒரு நண்பரோட குழந்தையின் முதல் பிறந்த நாள். செமத்தியா கொண்டாடியிருந்தாங்க.... எனக்குத்தான் ரொம்ப ஆச்சர்யம்.... நண்பரோட மனைவிகிட்ட கேட்டேன், எப்படி இவ்ளோ அயிட்டம்ஸ் ஒரே ஆளா செஞ்சீங்க....? அதெல்லாம் செஞ்சிடலாங்க... உங்க வீட்டுல முதல் பொறந்தநாள் வரும்போது நீங்களும் செய்வீங்க பாருங்க... அவங்களோட பதில்தான் கொஞ்சம் உசுப்பேத்திவிட்டுடுச்சு....

இப்போ:

இது எங்கள் வீட்டில் கொண்டாடப்போகும் முதல் பிறந்த நாள்.
ஏதாவது ஸ்பெஷலா செய்யலேன்னா வரலாறு நம்மள தப்பா பேசிடுமே.... அதனால எளிமையா கொண்டாடலாம்ன்னு சங்கத்துல முடிவெடுத்தோம்.


பெர்த்டே பேபிக்கு ரொம்ப கூச்ச சுபாவம், அதனால ஒரே ஒரு குடும்ப நண்பரையும் அவர் மனைவியையும் மட்டும் அழைப்பது என்று முடிவாயிற்று. (இந்த ஊர்ல எங்களுக்கு தெரிஞ்சதே 2 குடும்பங்கள்தான் :-) )


முதல்ல வீட்ட சுத்தம் பண்ணனுமே. ரெகுலரா சுத்தம் பண்ண வீடுதானன்னு நம்பி களத்துல எறங்கிட்டேன். சோபால இருக்குற டெகரேட்டிவ் பில்லோ, சீட் எல்லாத்தையும் எடுத்தா, கிச்சன்ல இருக்க வேண்டிய பாதாம் பருப்புல ஆரம்பிச்சு, பேனா, பர்ஸ்ல இருக்கவேண்டிய பைசாக்கள், குப்பைத்தொட்டில இருக்கவேண்டிய சாக்லேட் பேப்பர் வரைக்கும் வஞ்சனை இல்லாம இருந்தது.


இந்த சோபா வீட்டுக்கு வந்து 2 மாசம் கூட ஆகல.... :-( உபயம்: பெர்த்டே பேபி.


அடுத்து கட்டிலுக்கு அடியிலும் இதே கதைதான். எக்ஸ்ட்ராவாக கொஞ்சம் ஆரஞ்சு பழ தோலும் காலியான கோக் கேன்களும்.
மத்த நாளா இருந்தா ஏதாவது சொல்லலாம். பெர்த்டே சமயமாச்சே....அதனால் மூச்ச்ச்ச்ச்.................ஒரு வழியா வீட்டை சுத்தம் செஞ்சு முடிக்கும் போதே மணி 3 ஐ தாண்டிடுச்சு... இனிதான் ஸ்வீட் ஏதாவது செய்யணும்... நம்ம ஊரா இருந்தா கடைல வாங்கிட்டு வீட்டுல பண்ணதா சீன் போட்டுடல்லாம்...இப்போ அதுக்கும் வழி இல்ல...


எனக்கு செய்யத்தெரிஞ்ச ஒரே இனிப்பு, குலோப் ஜாமூன் மட்டும் தான். திடீர்ன்னு குலோப் ஜாமூன் மிக்ஸ்க்கு எங்க போறது..? எப்பவோ ஏதோ இணையத்துல ஆல் பர்ப்பஸ் மாவுல பண்ணலாம்னு படிச்ச நியாபகம்... அரகுறையா நியாபகம் இருந்தத வச்சு செய்ய ஆரம்பிச்சேன்... இது மாதிரி ஒரு குலோப் ஜாமூன நான் என் வாழ்க்கைல பாத்ததில்ல... அப்படி ஒரு குலோப் ஜாமூன்.


அதுக்காக நாங்க விட்டுருவோமா... அடுத்தது வீட்டுல இருக்குறத வச்சு ஏதாவது பண்ணலாம்ன்னா... நான் செஞ்ச பாதாம் அல்வா கிட்டத்தட்ட 1 மாசமா அப்படியே இருக்குறது நியாபகம் வந்தது... திரும்ப அது மாதிரி ஸ்வீட்ஸ் செஞ்சு அசிங்கப்படவேண்டமேன்னு யோசிக்க ஆரம்பிசேன்....


கொஞ்ச நேரத்துல பல்பு எரிஞ்சு, லட்டு பண்ணலாம்ன்னு முடிவுக்கு வந்தேன்... (இன்னும் நீ திருந்தலயான்னு கேக்குரீங்களா???)
ஒரு வழியா செஞ்சு முடிச்சு உருண்டையும் புடிச்சி வச்சாச்சு....


நம்ம பெர்த்டே பேபிக்குத்தான் கிச்சன்ல வர்ற வாசனைய வச்சே ஏதோ செஞ்சிருக்கோம்ன்னு தெரிஞ்சிடுமே.... சர்ப்ரைசா லட்டு கொடுத்தாதான் நல்லா இருக்கும்.. அதனால கொஞ்சம் பஜ்ஜியும் செஞ்சி முடிச்சாச்சு...
ஒரு 5 நிமிஷத்துல பெர்த்டே பேபி வீட்டுக்கு வந்தாச்சு. வந்ததும் கேட்டது, என்ன சமச்ச???? வாசன வருது???


மறுநாள் பிறந்தநாள்,
12 மணிக்கு லட்டு கொடுத்ததும் பார்க்க வேண்டுமே முகத்தை...."எனக்குத் தெரியும்.... அப்பவே நெய் வாசன வந்தது..:-) "


காலையில் கோவிலுக்கு போவது என்று நானும் நண்பரின் மனைவியும் ஏற்கனவே முடிவெடித்திருந்தோம். காலையில் சமைத்து எடுத்துச் சென்று அங்கே கோவிலுக்கு அருகில் இருக்கும் பூங்காவில் சாப்பிடுவது என்று.. கோவிலில் இருக்கும் உணவகத்தில் காலை சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பது திட்டம்....


அதிகாலையில் ஆரம்பித்த சமையல், ஒரு 9 மணி வாக்கில முடிந்தது..... புதினா சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு,தயிர் பச்சடி, ஊறுகாய், என எல்லாத்தையும் டப்பாக்களில் வைத்துவிட்டு கிளம்பும்போது 11 ஆகி விட்டது...
கோவில் எங்கள் வீட்டில் இருந்து 30 மைல் தூரம். ரொம்ப நெரிசல் இல்லாததால் 11.30க்கு போய் சேர்ந்துவிட்டோம்...
முதலில் போய் வெங்கிக்கு ஒரு ஹாய் சொல்லலாம் என்றால் அவருக்கு மேக்கப் நடந்து கொண்டு இருந்தது.... இன்னும் 45 நிமிடம் ஆகலாம் என்றார்கள்... அதனால் போய் சிம்பிளாக ஒரு சாம்பார் சாதமும் தயிர் சாதமும் வெட்டிவிட்டு , கோவிலின் மத்த இடங்களை சுத்திப்பார்த்துவிட்டு வந்தால் இன்னும் வெங்கி பிஸி... கொஞ்ச நேரம் காத்திருந்த பின் தரிசனம்...புகைப்படங்கள் எல்லாம் வேண்டிய அளவு எடுத்துவிட்டு பூங்காவுக்கு செல்லலாம் என்றால், பயங்கர வெயில்... நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லாமல் மலைகளாக மட்டும் இருந்தது.. நானும் நண்பரின் மனைவியும் மலை ஏறுவதற்கோ, அல்லது நெடுந்தூரம் நடப்பத்ற்கோ ஏதுவாக உடை அணியாததால் வீட்டுக்கு திரும்புவது என்று முடிவாயிற்று...அப்புறம் டப்பாவில் இருந்த சாப்பாடு வீட்டில் தான் சாப்பிடவேண்டும் என்று வெங்கியின் உத்தரவு...
அதனால் ஒரு 3 மணிக்கு சாப்பிட்டு தூங்கியவர்கள்தான் 7 மணி போல்தான் நியாபகம் வந்தது, 4 மணிக்கு ஸ்னோ பால், 8 மணிக்கு டின்னர், 9 மணிக்கு மூவி எல்லாம்......
வடிவேலு அண்ணன் சொல்லுவது போல்... எதையுமே நல்லா பிளான் பண்ணி செய்யணும். இல்லேன்னா இப்படித்தான்.பி.கு1: குலோப் ஜாமூன் செய்ய ஆல் பர்பஸ் கூட மில்க் பவுடர், கோவா எல்லாம் சேக்கணும் போல.. நான் சரியா கவனிக்காததால சொதப்பிடுச்சு... ஹி ஹி ஹி... :-)


பி.கு2: எங்க கல்யாணம் நடந்து முதல் பிறந்தநாள் என் கணவருக்கு.... :-)பி.கு3: என்னதான் பிளான் சொதப்பிட்டாலும் நான் காலைல எந்திரிச்சு சமைச்சதே அவருக்கு சந்தோஷம்... வீட்டுல இருக்குற மாதிரி அன்னைக்குத்தான் தோணியிருக்காம். (அஸ்க்கு புஸ்க்கு இப்படியெல்லாம் ஐஸ் வச்சா நாங்க காலைல சமைச்சிருவோமா?? உங்களுக்கு எப்பவும் corn flacks தான்) :-)

Wednesday, March 25, 2009

முதல் நாள் கல்லூரி அனுபவம்...

முதல் நாள் கல்லூரி அனுபவம்...

முதல் நாள், எப்போ தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் இந்த தேதிய சொல்லமுடியும். ஏன்னா என்னோட பொறந்த நாளுல தான் இந்த காலேஜ்ல கால எடுத்து வச்சேன்.
காலேஜ் அட்மிஷன் போட்டுட்டு, ஹாஸ்டல்லயும் போய் ஒரு துண்டைப் போட்டு எடத்தைப் புடிசாச்சு.
முதல் நாள் inauguration function, கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தேன். பின்ன வாட்ச்மேன்ல இருந்து பக்கத்து சீட்ல உக்காந்திருந்த பொண்ணுவரைக்கும் எல்லாரும் இங்கிலிஷ்ல என்ன கிழிச்சா நான் மிரளாம என்ன செய்ய? நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலிஷ் வாட் இஸ் யுவர் நேம் தான்.
நேரம் ஆக ஆக நாம இருக்குறது தமிழ்நாட்டுலயா இல்ல வேற எங்கயாவதானு கொஞ்சம் சந்தேகமாதான் இருந்தது. கல்லூரியோட வரலாறு புவியியல்ன்னு எல்லாத்தையும் சொன்னதுக்கப்புறம் சீனியர்ஸ் பாட்டெல்லாம் போட்டு கலக்கிட்டு இருந்தாங்க... ஆனா மருந்துக்குகூட ஒரு தமிழ் பாட்டு போடல. இந்த அக்கப்போர்ல இருந்து தப்பிச்சு ஒரு வழியா ஹாஸ்டல் ல போய் விழுந்தாச்சு.
சாயந்திரம் எல்லரோட அம்மா அப்பால்லாம் கிளம்புனாங்க...மத்த புள்ளைங்க எல்லாரும் ஏதோ கல்யாணமாகி போற மாதிரி கண்ணுல தண்ணியோட டாடா பைபை சொல்லிட்டு இருந்தாங்க. நம்ம கண்ணுல அப்பிடி தண்ணி ஏதாவது தெரியுதான்னு அம்மாவும் அப்பாவும் உத்து பாத்தும் அப்படி ஒண்ணும் தெரியல போல.. ரொம்ப சோகமா, அப்போ நாங்க கிளம்புறோம்ன்னு சொன்னாங்க... சரி டாடா பைபை சொல்லிட்டு ரூம்க்கு வந்தா எல்லாரும் கண்ணெல்லாம் வீங்கி உக்காந்துட்டு இருந்தாங்க....சரி இங்க நம்மள மாதிரி ஊர்க்கார புள்ளைக தான இருக்கும்ன்னு நம்பி பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துவச்சிட்டு கட்டில்ல உக்காந்தா ஒரு கொரலு.... "ஹாய் கேல்ஸ் ஐ அம் நிஷா" என்றது.. 
என்கிட்ட கேக்காமலே அந்த ரூம்ல புது சட்டம் இனிமே இங்கிலிஷ்ல தான் பேசணும்னு, அப்போதான் கடைசி வருஷம் கேம்பஸ் வரும் போது நல்லா பேச முடியுமாம்... அட பாவிங்களா நான் எவ்ளோ நாள் தான் மௌன விரதம் இருக்குறது...., அப்போதான் தெரிஞ்சது நம்மள தவிர எல்லாரும் இங்கிலிஷ் மீடியம்னு...
நான் முழிக்கிறதப்பாத்து பக்கத்துல இருந்த மதுரக்கார புள்ள, பயப்படாத இது எல்லாம் ரெண்டு நாளைக்கு கூட யாரும் பேச மாட்டாங்க என்றதும் தான் திரும்ப பொட்டிய கட்டலாம்ன்ற எண்ணத்த மாத்திகிட்டேன்.
அந்த பொண்ணு சொன்னது மாதிரி ஒரு நாள் கூட யாரும் இங்கிலிஷ் ல பேசல. அங்கே பாதி பேர் பேசினத பாத்தப்போ அண்ணாமலை படத்துல ஜனகராஜ் சார் பேசுற இங்கிலிஷ் தான் நியாபகம் வந்தது. நம்மளும் இங்க வண்டிய ஓட்டிடலாம்ன்னு நம்பிக்கையும் வந்தது. இருந்தாலும் பீட்டர் விட்டு பழக்கம் இல்லாததால கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்தது.

இனி நாங்க கேங் சேத்துகிட்டு பண்ணுன லொள்ளுஸ் எல்லாம் வேற பதிவுல சொல்லுறேன்.

Thursday, March 5, 2009

பாப்பா கதைகள்

வாங்க பாப்பா கதைகள்ல இருந்து நாம ஆரம்பிக்கலாம்...

இந்த கதைல வர பாப்பா உண்மைலேயே இருக்கா இல்லையானு சிந்திச்சு டைம் வேஸ்ட் பண்ணாம கதைக்குள்ள போய்டலாம்.

இந்த வாரம் நாம பாக்க போறது:

பாப்பாவும் மாமா கல்யாணமும்:

நம்ம பாப்பாவுக்கு வார்த்தை மாறினா சுத்தமா புடிக்காது. அப்பிடி மாறினவங்கள ஒரு தடவையாவது மன்னிப்பு கேக்க வச்சு ஒரு லாலி பாப் வாங்கிடுவா... பாப்பாவுக்கு வயசு என்னவோ ரெண்டரை தான் ஆகுது. ரொம்ப நாளா பாப்பாக்கும் மேக்கப் போட்டு அலப்பறையக் கொடுக்கனும்னு ஆசை....

அதுக்குனே வந்தது மாமா கல்யாணம்.வீட்ல எல்லாரும் பட்டுல பளபளன்னு ஜொலிச்சாங்க... நம்ம பாப்பாவும் தான்.... வீட்டுல இருந்து மண்டபம் போறவரைக்கும் ஒரு பிரச்சனையும் வரல... அங்க போனதுக்கப்புறம் தான் ஆரம்பிச்சது நம்ம பாப்பாவோட லீலைகள். பாப்பாவோட அம்மா கல்யாண பொண்ணை பாத்து ஒரு ஹாய் சொல்லலாம்னு பொண்ணு ரூம்க்கு போனாங்க... கூடயே போன பாப்பாக்கு அங்க போனதும் திரும்ப மேக்கப் போடணும்னு தோணிடுச்சு.

அங்க விட்டா தான் கொஞ்சம் நிம்மதியா எல்லா சொந்தத்தையும் பாத்து ஒரு ஹாய் சொல்லிடலாம்னு பாப்பாவை விட்டுட்டு அம்மா எஸ்கேப். பாப்பாக்கு காவலா தன்னோட அக்கா பொண்ணை விட்டுட்டு போனாங்க....
கொஞ்ச நேரம் ஆகியும் நமக்கு இன்னும் மேக்கப் போடலியேன்னு பாப்பாக்கு டென்சன் ஆரம்பிச்சுடுச்சி.... பியூட்டீசியனை பாத்து "எப்போ எனக்கு மேக்கப் போடுவீங்க ஆன்டி" என்றாள். பியூட்டீசியனும் பொறுமையாக,"கல்யாண பொண்ணுக்கு முடிச்சிட்டு உனக்குதான் கண்ணா" என்றார்
ஒரு வழியாக பாப்பாவுக்கு மேக்கப் போடும் நேரம் வந்தது. பாப்பாவும் ரொம்ப ஆர்வமாக முகத்தை கொடுத்தால் 2 நிமிடத்தில் கண்மையும் லிப்ஸ்டிக்கும் போட்டு விட்டு அவ்வளவுதான் முடிந்தது என்றதும், வந்ததே பாப்பாவுக்கு கோவம். கல்யாண பொண்ணை காட்டி "அந்த ஆன்டிக்கு எவ்ளோ நேரம் மேக்கப் போட்டீங்க?? எனக்கும் அவ்ளோ நேரம் போடணும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பியூட்டீசியன் நம் பாப்பாவைப் பற்றி தெரியாமல், "கண்ணா அவங்க கல்யாண பொண்ணு அதனால அவ்ளோ நேரம், நீ கல்யாண பொண்ணு ஆகும்போது ஆன்டி உனக்கும் அது மாதிரி பண்ணுறேன்" என்று சொல்லிவிட்டு, ஏதோ சாமர்த்தியமா பேசிட்டதா நெனச்சிகிட்டு கெளம்பிட்டாங்க...

கோவத்தோட மாமாகிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ண கிளம்பிட்டாங்க நம்ம பாப்ஸ். கல்யாண கோலத்துல பொண்ணுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்த மாமாக்கு டென்சன்ல பாப்ஸ் சொன்ன பாதி புரியல... இருந்தாலும் சமாளிக்க பியூட்டீசியன் சொன்ன தீர்ப்பயே இவரும் சொல்லி பக்கத்துல உக்கார வச்சிட்டார்.
பொண்ண காணோமேன்னு தேடி வந்த அம்மாக்கு, தன் தம்பி பக்கத்துல பாத்ததும்மயக்கம் வராத கொற தான். இனி என்ன பிரச்சனை வரப்போகுதோ ஆண்டவா....
ஆனால் பாப்பா ரொம்ப அமைதியா உக்காந்திருந்தா.... உண்மையில அவ மனசுல மேக்கப் மட்டும் தான் ஓடிகிட்டு இருந்தது..... திடீர்னு ஒரு பல்பு எரிஞ்சது பாப்பா மண்டையில....

அய்யர்: கல்யாண பொண்ண அழைச்சிட்டு வாங்கோ....

பாப்பா மாமாவை கூப்பிட்டு ஒன்று சொன்னாள், அவருக்கு தலையே சுற்றி விட்டது....நடந்து வந்த பொண்ணு கூட அவரு கண்ணுல தெரியல.

பாப்பா: மாமா நானே இன்னைக்கு கல்யாண பொண்ணா இருக்கேனே....

நம்ம பாப்பா ரொம்ப கூலா அய்யர்கிட்ட "நான் தான் கல்யாணபொண்ணு " என்றாள்

பி.கு1: தலைப்பை பாத்து இத படிச்சிட்டு உங்க பாப்பாக்கு கதை சொல்லலாம்னு நெனச்சிருந்தீங்கன்னா அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்ல...

பி.கு2: கடைசியில என்னதான் நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறவங்களுக்கு, கல்யாணம் ஒரு வழியா பாப்பாவை மேக்கப் போட அனுப்புனதும் நல்லா நடந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு பாப்பாவ எந்த கல்யாணத்துக்கும் அவங்க அம்மா கூட கூட்டிட்டு போறதில்லன்னு கேள்வி...Wednesday, February 25, 2009

Blog under construction... :)