Sunday, May 31, 2009

சில்லுன்னு ஒரு கோடைக்காலம்

ஒவ்வொரு கோடையும் ஒவ்வொரு புது அனுபவம்தாங்க.....

ஒரு சில கோடைகால அனுபவங்கள் மழைக்காலம் வர்றதுக்குள்ள மறந்துடுவோம், ஒரு சில அனுபவங்கள் பசுமரத்தாணி போல மனசுல எப்பவும் இருக்கும். சில நேரங்கள்ல புது அனுபவங்கள் பழைய நியாபகங்களை கொண்டுவரும்...

அதுக்கு என்ன இப்போன்னு கேக்குரீங்களா?

இந்த கோடை என் வாழ்க்கைல நடந்த ஒரு சம்பவத்தை மறுபடியும் நியாபகப்படுத்தி இருக்கு...

அது என்னுடைய முதல் ஊட்டி பயணம். அதுவும் மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, அண்ணண்கள், அக்காள்கள்ன்னு ஒரு 16 பேரு... அந்த கூட்டத்திலேயே நான் தான் கடைக்குட்டி... யாராவது என்ன படிக்கிற என்று கேட்டால் இந்த காலத்து குழந்தைகள் போல் "பஸ்ட் ஸ்டாண்டர்ட் டூ செகண்ட்" என்று சொல்லத்தெரியாமல், இப்போ லீவு, இன்னும் நான் படிக்கல என்று உளறிக்கொண்டிருந்த வயது.

நல்லபடியாக சுற்றுலா சென்று கொண்டிருந்த சமயம், திடீரென்று எங்கள் குழுவில் ஒரு சலசலப்பு... என்னைக் காணவில்லை!!!... அந்த கூட்டத்தில் எப்போது தொலைந்தேன் என்று யாருக்கும் தெரியவில்லை.. பெருசுகள் எல்லாம் சிறுசுகளிடம் கேட்க, எல்லோரும் ஒருவர் மாற்றி ஒருவரிடம் கைகாட்ட, எல்லோருக்கும் டென்சன் அதிகமாகிக் கொண்டே போனதாம். 2 மணி நேரத்துக்கும் மேல் நாங்கள் அதுவரை சென்ற கடை, இடங்கள் எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை....

இனி போலீசிடம் போவதுதான் சரி என்று பெருசுகள் எல்லாம் பக்கத்தில் ரோந்தில் இருந்த போலீசிடம் விஷயத்தை சொல்ல, அவர் கூட கொஞ்சம் டென்சனாக்கும் விதமாக, ஊருக்குள்ள இருந்தா கண்டுபுடிக்கலாம், ஒருவேளை மலைவாசிங்க கிட்டயோ இல்ல ரவுடிங்ககிட்டயோ மாட்டியிருந்தா கஷ்டம் தான் கண், கிட்னி எல்லாம் எடுத்துடுவாங்க என்று அவரால் முடிந்தவரை பயமுறுத்தி விட்டு பின்னர், ஸ்டேசனுக்கு வழி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அதுவரை அம்மா ஊரில் இருக்கும் எல்லா சாமிக்கும் விதவிதமாக என்னென்னவோ வேண்டிக்கொண்டு கண்ணில் தண்ணீரோடு நாங்கள் சென்ற வேனில் உட்கார்ந்திருக்க.. அப்பாவும், மாமாவும் ஸ்டேசனுக்கு போனார்கள்.

இதற்க்கிடையில் தொலைந்துபோன நான் கொஞ்ச நேரம் கழித்துதான் உணர்ந்திருப்பேன், கூட வந்தவர்கள் யாரும் பக்கத்தில் இல்லை என்று.. எனக்கு நியாபகம் இருக்கும்வரை ஒரு போலீஸ் நான் தனியாக சுற்றுவதைப் பார்த்து விசாரித்தார். என்னுடைய பெயர், அப்பா, அம்மா பெயர், எந்த ஊர் எல்லாம் தெளிவாக சொல்லிவிட்டு, அவரிடமே "எங்க அப்பா, அம்மாவ காணோம், தொலஞ்சு போய்ட்டாங்க" என்று சொன்னேன்.

அவர் கொஞ்சம் குழம்பி இருப்பாரோ என்னவோ, கொஞ்ச நேரம் கையில் இருந்த வாக்கி டாக்கியில் ஏதோ பேசிவிட்டு, ஜீப்பின் மேல் சப்பணக்கால் போட்டு உட்கார்ந்திருந்த என்னிடம் வந்தார். நாம ஸ்டேசன் போயி வெயிட் பண்ணுவோமா என்றர். நான் பக்கத்தில் விற்றுக்கொண்டிருந்த பஞ்சு மிட்டாயை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே சரி என்று தலையாட்டினேன். அப்புறம் அவரே ஒரு பஞ்சுமிட்டாய் குச்சியை வாங்கிக்கொடுத்தார்.

நான் சாப்பிட ஆரம்பித்த நேரம், போலீஸ் ஸ்டேசனுக்கு போய்க்கொண்டிருந்த அப்பாவும் மாமாவும், அந்த இடத்தினை கடந்தார்கள்.
ஒரு வழியாக அப்பாவைக் கண்டுபிடித்துவிட்டேன் :-)

அப்புறம் அப்பாவுக்கு கொஞ்சம் அட்வைஸும் எனக்கு இன்னொரு பஞ்சு மிட்டாயும் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அந்த நல்ல மனிதர்.

இது நடந்து பல வருடங்களாயிற்று இப்பொது, இந்த கோடையில் நான் தொலைந்தது சான் ஃபிரான்சிஸ்கோவில்... என் கணவரின் நண்பரின் குடும்பமும், நாங்களும் சென்றோம். வழக்கம்போல் கடைசி நேரத்தில் முடிவு செய்து போனதால், அங்கே போய் தான் நுழைவு சீட்டு வாங்க வேண்டியிருந்தது... வீட்டுக்காரரும் அவரின் நண்பரும் கார் பார்க்கிங் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் நானும் நண்பரின் மனைவியும் நுழைவு சீட்டு வாங்க கிளம்பிவிட்டோம்.

மொத்தம் ஒரு 7 இடத்தில் இந்த நுழைவுச்சீட்டு வாங்கலாம், அதில் ஒரு இடத்தில் போய் நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டு, கார் பார்க்கிங் தேடி சென்றவர்களுக்கு சொல்லலாம் என்று கைப்பையை கவுத்துப் போட்டு தேடினாலும் தோழியின் செல்பேசியை காணவில்லை. என்னிடமும் செல்பேசி கிடையாது.

சரி ஒரு பொது தொலைபேசியாவது கண்ணில் படுகிறதா என்று பார்த்தால் நம்ம நேரத்துக்கு ஒன்றுகூட கண்ணில் படவில்லை. நுழைவுச்சீட்டு வாங்கிய இடத்தில் ஒரு போன் செஞ்சுக்கலாமா என்று கேட்டோம், அவர் ஏதோ மேலதிகாரிக்கு எல்லாம் போன் போட்டுவிட்டு, சாரி என்று கையை விரித்துவிட்டார்.

மீண்டும் அறைக்கு சென்று செல்பேசியை எடுக்கலாம் என்றால், டாக்ஸி எப்படி அழைப்பது? அதற்க்கும் போன் செய்ய வேண்டுமே. ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட 2 தெருக்களையே சுற்றி வந்தோம். ஒரு வழியாக தோழி அவரின் கணவரை தூரத்தில் பார்த்துவிட்டார்.

சரி நம்ம ஆளு என்ன பண்ணுறாருன்னு பாத்தா, இந்தியால இருக்குற பிரண்டுக்கு போன் போட்டு மொக்கைய போட்டுட்டு இருந்தார். அதுவும் என்ன மேட்டருன்னா, அவர கிராஸ் பண்ணி போன பொண்ணு நயன் தாரா மாதிரி தெரிஞ்சுதாம், அது உண்மைலியே நயன் தாராவா, இல்ல நயன் தாரா சாயல்ல வேற யாரவதான்னு.

இப்போ நயன் தாரா இந்தியால இருக்காங்களா, இல்ல சான் ஃபிரன்சிஸ்கோ வந்திருக்காங்களான்னு யாராவது விசாரிச்சு சொன்னா அவரு கொஞ்சம் நிம்மதியா தூங்குவாரு. முடிஞ்சா உதவி பண்ணுங்க.. :-)

எப்படியோ, ரெண்டு தடவ தொலஞ்சாலும் நல்லா சில்லுன்னு இருக்குற மாதிரி அனுபவங்கள் கிடைச்சிருக்கு... :-)